தேங்காய் சகுனம்!

54

தேங்காய் உடைத்தலில் இருக்கும் சகுண
ரகசியங்கள் பற்றி
தெரிந்து கொள்வோமா?

காலம் காலமாகவே நம்முடைய வழிபாடுகளில் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம்.தேங்காயை உடைத்து, அதன் குடுமியை அகற்றிவிட்டு, உள்ளிருக்கும் வெண்மையான பருப்புகளை இறைவனுக்கு சமர்ப்பித்து, தீப ஆராதனை செய்யும்போதுதான், நம்முடைய பூஜை முழுமை பெற்றதாக உணருகிறோம்.அதேபோல் கோயில்களுக்குச் செல்லும்போது, அர்ச்சனைத் தட்டை குருக்களிடம் கொடுத்துவிட்டு, நாம் கொடுத்த தேங்காய் சரியாக உடைக்கப்படுகிறதா? இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு பூஜையின்போது தேங்காய் நம்முடைய உணர்வுடன் ஒன்றிவிட்ட விஷயமாகிவிட்டது. இது உடையும் தன்மையைப் பொறுத்தே நம்முடைய இன்பதுன்பங்களைக் கணிக்கும் அளவுக்கு இதன் மீதான நம் நம்பிக்கை மிகப் பெரியது. இப்படி முக்கியத்துவம் கொண்ட தேங்காயை இறைவனுக்குப் படைப்பதன் தத்துவம் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.

ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் மும்மலம் என்று சொல்லப்படுகின்றது.

தேங்காய் உடைப்பதென்பது நம் ஆன்மாவைச் சுற்றியுள்ள இம்மும்மலங்களைப் போக்குவதற்காகவே.

தேங்காயின் மேல் இருக்கும் மட்டையை
மாய மலம் என்றும்,
மட்டை என்னும் மாய மலத்தை நீக்கினால், அடுத்ததாக வரும் நார் என்பதை கண்ம மலம் என்றும், கண்ம மலத்துக்கு அடுத்து வரும் ஓட்டை ஆணவ மலம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மூன்று மலங்களையும் நீக்கிய பிறகு கிடைக்கும் வெண்மையான பருப்பே பேரின்பம் என்றும் சொல்லப்படுகிறது.

நம் மனதை மூடியிருக்கும் இந்த மூன்று மலங்களையும் அகற்றி, பேரின்பத்தை அடையவேண்டும் என்பதற்காகவே தேங்காய் உடைத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம்.

தேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம்.

இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும்.

எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நாம் அர்ச்சனைக்குக் கொடுத்த தட்டு மாறி வந்தால், அதை நாம் அபசகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

அதேபோல் ஆலயத்தில் உடைக்கும் தேங்காய்க்கும் சகுனம் பார்க்கத் தேவையில்லை.

சகுனம் பார்ப்பதற்காக உடைக்கப்படும் தேங்காய், அது உடையும் முறையைப் பொறுத்து நமக்குப் பலன்களைத் தரும்.

தேங்காய் சரிபாதியாக உடைந்தால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

தேங்காயின் மேல்பகுதி அதாவது கண்பாகம் உள்ள பகுதி பெரிதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் உடைந்தால்

இல்லத்தில் செல்வம் பெருகும்.

கண்பகுதி சிறியதாகவும் கீழ்ப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்பத்தில் உள்ள பிரச்னைக்கு உரிய விஷயங்கள் தீர்ந்து
இல்லத்தில் அமைதி பெருகும்.

தேங்காய் உடைக்கும்போது ஒரு சிறிய பாகம் அதனுள் விழுந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் நிச்சயம் உருவாகும்.

சகுனத்துக்கு உடைக்கும் தேங்காயின் உட்புறம் பூ இருப்பின் நினைத்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும்,

தேங்காய் நீளவாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்னைகள் உருவாகும்.

சரிசமமாக உடைந்தால், துன்பம் தீரும், செல்வம் பெருகும்.

மூன்றில் ஒரு பங்காக உடைந்தால், ரத்தினம் சேரும்.

ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால், அழியாத செல்வம் உண்டாகும்.

சிறு சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு, ஆபரண லாபம் உண்டாகும்.

ஓடு தனியாக கழன்றால், துன்பம் வரும்.

நீளவாக்கில் உடைந்தால், தனம் அழிந்து துன்பம் உண்டாகும்.

உடைக்கும் பொழுது கைபிடியில் இருந்து
தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.

முடி பாகம் இருகூறானால் தீயினால் பொருள் சேதமாகும்.

ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டி கொண்டிருக்கும்பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால், வேண்டும் காரியம்
உடனே வெற்றியைத் தரும்.

தேங்காய் அழுகி இருப்பின் நினைத்த காரியங்கள் சற்று தள்ளிப் போகும்.

சிதறு தேங்காய் உடைக்கும்பொழுது சகுனம் பார்க்க வேண்டியதில்லை.

சாஸ்திரமானது பூமிக்குள் விளையும் பொருட்களை அகந்த மூலம் என்றும், மரத்தின் உச்சியில் விளையும் பொருட்களை கந்த மூலம் என்றும் குறிப்பிடுகின்றது.

அகந்த மூலமானது மனிதனுக்கு தாம்ச குணத்தையும்,
கந்த மூலம் சத்வ குணத்தையும் உருவாக்கும்.

மரத்தின் உச்சியில் விளையும் கந்த மூலப் பொருளான தேங்காயை மனிதன் உட்கொள்ளும்போது மனிதனுக்கு சத்வ குணம் மேலோங்கி இன்பத்துடன் வாழலாம்.