விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் கவிஞர் புவியரசுக்கு விழா

29

கவிஞர் புவியரசுக்கு 90 வயது நிறைவு பெற்றதையொட்டி, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் புவி90 என்ற பெயரில் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் அரங்கசாமி அனைவரையும் வரவேற்றார். கவிஞர் புவியரசு பற்றிய புவி – 90 என்ற பெயரிலான ஆவணப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் புவியரசு நினைவு பரிசாக புத்தர் சிலை, வாழ்த்து பட்டயம் ஆகியவற்றை எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வழங்கினார். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் எம்.கிருஷ்ணன், இந்திய தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் கவிஞர் புவியரசுக்கு மரியாதை செய்தனர். தொடர்ந்து எழுத்தாளர்கள் மரபின்மைந்தன் முத்தையா, இயாகோகா சுப்பிரமணியம், கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கவிஞர் புவியரசு ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பல சிறப்பான நிகழ்வுகளை தொடர்ந்து செய்து வருகிறது. அவற்றில் எல்லாவற்றிலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு வாய்ப்புகள் அமையவில்லை. அதிக மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டுள்ளேன். கவிதைகளை எழுதியுள்ளேன். எப்போதும் பெரியார், திருவள்ளுவர், மார்க்சிசம் எனப் பிரித்துப் பார்த்ததில்லை என்றார்.