மதமும் அரசியலும்

41
 1. இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்கள் இங்கிலாந்தை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்துவதாக வந்த ஒரு பதிவின் அடிப்படையில் மதங்கள் பற்றிய ஒரு ஆய்வு இது.
 2. உலக வரலாற்றில் மதங்களால் மானிடத்திற்கு அழிவுதான் ஏற்பட்டுள்ளதே தவிர எந்தவித நன்மையும் ஏற்பட்டதில்லை. எந்த மதமும் பிற மதம் இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக பிற மதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றுதான் போதிக்கிறது.
 3. அம்முயற்சியில் மதங்கள் செய்கின்ற முதல் வேலை கற்பனைக்குக்கூட எட்டாத ஒன்றை “எல்லாம் அவன் தான்” என்று சொல்லி மக்களின் பகுத்தறிவுச் சிந்தனையை கொஞ்சம் கொஞ்சமாக ஒழிப்பதுதான்.
 4. பகுத்தறிவுச் சிந்தனையை இழந்தபிறகு அம்மக்களிடம் மனிதாபிமானத்தையோ மனிதநீதியையோ எதிர் பார்க்க இயலாது. ஆம் மதம் என்ற போதைக்கு அடிமையானவர்களிடம் மனிதாபிமானத்திற்கு இடமில்லை.
 5. இதைத் தெரிந்தும் அனுபவித்தும் கற்றவர்கள் கூட மத அடிப்படையில் இயங்குவதையும் வேறுபட்ட மதங்களில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் இன்றும் மோதிக் கொண்டிருப்பதையும் உலகம் முழுவதும் பார்க்கின்றோம்.
 6. இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன?
  இம்மாதிரி பதிவுகளைப் பார்த்து ஒரு மதத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தி அதற்குப் போட்டியாக மற்ற மதங்களை வளர்ப்பதால் எந்தத் தீர்வையும் காண முடியாது.
 7. மதங்கள் மத போதனையோடு இருப்பதில்லை. மாறாக அம்மதத்தைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறையை அம்மதங்களுக்கு அடிமையாக்கிய பிறகு அம்மக்களை வைத்தே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தங்களது அராஜகத்தை அரங்கேற்றி வருகின்றன.
 8. மத போதைக்குச் சென்றுவிட்ட மக்கள் கேள்வி ஞானத்தை இழந்துவிடுவதால் மத ஆட்சியில் தட்டிக் கேட்பதற்கு இடமேயில்லை.
 9. மதமும் அரசியலும் இணையாத வரைதான் மக்களுக்குப் பாதுகாப்பும் பலனும் உண்டு. ஆனால் ‘மதம்’ நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்காமல் இருந்த வரலாறே இல்லை. மதம் நுழைந்த ஆட்சி உருப்பட்ட வரலாறுமில்லை.
 10. மதங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் இடம் கொடுக்காமல் இருந்தால்தான் மக்களின் திறன் அனைத்தும் மத வேறுபாட்டால் சீரழிக்கப்படாமல் மக்களின் வளர்ச்சிக்காகவே பயன்படும். எல்லோருக்கும் நீதி கிடைக்கும்.
 11. இந்நிலையை உருவாக்குவதற்குத் தான் சைனா போராடி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. சைனா மக்களின் அனைத்துத் திறன்களையும் மத வேறுபாடுகளால் சீரழிக்கப்படாமல் மக்கள்- நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதால் தான் இன்று பிரமிக்கத் தக்க மகத்தான வளர்ச்சியை எல்லாத்துறையிலும் பெற்றுவருகிறது என்பதை நிரூபிக்கப்பட்ட உண்மையாகப் பார்க்கிறோம். S. Ramanathan IPS
  ADGP(RTD)