ஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம்:

15

புரோக்கர்கள் ஏற்பாட்டில், கும்பகோணம் போக்குவரத்து ஆர்.டி.ஓ.,வுக்கு மலர் அபிஷேகம் செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது._

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து ஆர்.டி.ஓ., முக்கண்ணன், 53. கடந்த மாதம் 24ம் தேதி தான் இங்கு பொறுப்பேற்றார். ஏற்கனவே 2012 – 2016 வரை, கும்பகோணத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து, கடலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார். கடலுாரில் புரோக்கர்களுக்கு ஆதரவாக முக்கண்ணன் செயல்பட்டதாக ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டதால், சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், முக்கண்ணன் மீண்டும் கும்பகோணத்திற்கு வந்ததால், அவருடன் முன்பு இணைந்து செயல்பட்ட புரோக்கர்கள் குஷியாகினர். அவரை மகிழ்விக்க, கடந்த வாரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், முக்கண்ணனுக்கு பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் சிவாச்சாரியார்கள் மூலம், அம்மனுக்கு சாற்றிய மாலைகளை அணிவித்து, பரிவட்டம் கட்டி, மலரால் அபிஷேகம் செய்தனர். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மலர் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்த நபர்கள் மீதும், அரசு அலுவலகத்தில் விதிகளை மீறி நடந்து கொண்ட ஆர்.டி.ஓ., மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.