அநேகம் பேருக்கு தெரியாத சிதம்பரம் ஸ்ரீ கற்பக கணபதி…

42

சிதம்பரம் சைவர்களுக்குத் தலையாய கோயில்.

பஞ்சபூத ஸ்தலங்களுள் ஆகாய ஸ்தலம்.

சிதம்பரம் ஆலயம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கின்றது.

இந்த ஆலயத்தின் நடுநாயகமாகவும், ஆலயத்தின் இதயம் போன்ற இடத்திலும் நடராஜர் நர்த்தனம் ஆடுகின்றார்.

அந்த மைய இடத்தைச் சுற்றி, பல்வேறு சிறப்புகள் கொண்ட பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அமைந்த ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றன.

அப்படி சிறப்பு பெற்ற கோயில்களுள் ஒன்றாகிய, ஸ்ரீ கற்பக கணபதி ஆலயத்தின் வரலாறு மற்றும் சிறப்புக்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

சிதம்பரம் ஆலயத்திற்கு நான்கு கோபுரங்கள் நான்கு வேதங்களாக அமைந்திருக்கின்றன.

நான்கு கோபுர வாயில்கள் வழியேயும் சென்று நடராஜரை தரிசனம் செய்து வரமுடியும்.

நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும்போது, முதற்கண், முழுமுதற் கடவுளாகிய கணபதியை வழிபடும் வகையில் அமைந்த ஒரு அற்புதத் தலம் சிதம்பரம்.

இதில் மேற்கு கோபுரம் வழியே நடராஜரை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில், ஸ்ரீ கற்பக கணபதியை வழிபட வேண்டும்.

மேற்கு கோபுரத்தின் கல்ஹாரம் எனும் அமைப்பில், கருங்கல் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பவர் ஸ்ரீ கற்பக கணபதி.

அந்தப் புடைப்புச் சிற்பத்தை மையமாகக் கொண்டு ஆலயம் அமைந்திருப்பது அதிசிறப்பானது.

பொதுவாக, விநாயகர் ஆலயம் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும்.

ஆனால் ஸ்ரீ கற்பக கணபதி மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றது.

கற்பகத் தரு என்றால் கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம் என்று பொருள்.

அதுபோல், நாம் கேட்கும் வேண்டுதல்களை உடனடியாகத் தரக்கூடியவர் ஸ்ரீ கற்பக கணபதி.

சிதம்பரத்தின் நான்கு ரத வீதிகளில் மேற்கு ரத வீதி இவரின் பார்வைபடும்படியாக அமைந்திருக்கின்றது.

இவரின் பார்வையால், மேற்கு ரத வீதி செல்வ நடமாட்டம் (money circulation) மிக்கதாக, கடை வீதியாக (bazaar street) அமைந்திருப்பது கேட்டதைக் கொடுக்கும் கற்பகத் தரு போல இவரின் வரம் தரும் தன்மையைக் காட்டுகின்றது.

ஸ்ரீ கற்பக கணபதி சிதம்பரம் வணிகர்களின் வழிபாட்டில் மிக முக்கிய இடம் பெறுபவர்.

ஸ்ரீ கற்பக கணபதி வரலாறு:

பொதுவாக கணபதி ஆலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்க, கற்பக விநாயகர் ஏன் மேற்கு முகமாக அமைந்திருக்கின்றார்?

இதற்கென்று தனியாக புராண வரலாறு உண்டு.

அத்ரி மகரிஷியின் புத்திரரும், முனிச்ரேஷ்டரும், தவம் செய்வதில் ஈடற்றவரும், பெரும் தவ வலிமை கொண்டவரும், அதே சமயம் அதீத முன் கோபம் கொண்டவரும், கோபம் வந்தால் உடனே சாபம் அளிப்பவரும் ஆகிய துர்வாச மகரிஷி, ஒரு சமயம், சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் காண, தன் சீடர்கள் சூழ பரிவாரங்களோடு, மேற்கு கோபுர வாயில் வழியாக வந்தார்.

அவர் வரும் சமயம், நிசித காலம் எனும் நள்ளிரவுப் பொழுது ஆகிவிடுகின்றது.

எனவே கோயில் பூஜைகள் அனைத்தும் முடிந்து நடராஜருக்கு திருக்காப்பிட்டு நெடுநேரமும் ஆகிவிட்டது.

ஆயினும், துர்வாசர் நடராஜப் பெருமானின் திருத்தாண்டவக் கோலத்தை ஆர்வமுடன் காண வருகின்றார்.

நெடுந்தூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தால் அனைவரும் பசித்திருக்கின்றனர்.

பசியோடும், ஆவலோடும் வரும் துர்வாசரைக் கண்ட அனைவரும் அஞ்சுகின்றார்கள்.

நடராஜருக்கு திருக்காப்பிடப்பட்டுள்ளதால், நடராஜரைக் காண முடியாமல் துர்வாசர் சாபம் கொடுத்துவிடுவாரோ என்று பயம் கொள்கின்றார்கள்.

அனைத்துஉலகக்காரணியும், அனைவருக்கும் அன்னமிடும் அம்பிகையின் அம்சமாகிய, அன்னபூரணி தேவி இந்த நிலைமையை சமாளிக்க உடனே தோன்றி, முதலில் துர்வாசர் முதற்கொண்டு, சீடர்கள் வரை அனைவருக்கும் அன்னமிட்டு வயிறைக் குளிர்விக்கின்றாள்.

[துர்வாசருக்காகத் தோன்றிய அன்னபூரணி, இன்றும் ஆலய பிரசாதங்கள் சமைக்கும் இடமாகிய மடைப்பள்ளியின் முகப்பு மண்டபத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.

இவர்கள் அனைவரும் அன்னம் புசித்த இடம் – இன்றும் மேற்கு கோபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் ‘மேலமடம்’ (அகோர சிவாச்சாரியர் மடம் – இங்கு துர்வாசருக்கு சிலை உண்டு) அமைந்திருக்கின்றது.]

தந்தைக்காக தாண்டவம் ஆடிய தனயன் :

வயிறு குளிர்ந்த அனைவரும், மனம் குளிர தரிசனம் செய்ய வருகின்றார்கள்.

ஆயினும், கதவுகள் சாற்றப்பட்ட நிலையில் எப்படி நடராஜரை தரிசனம் செய்ய முடியும்?

இங்கு தான் விநாயகர் அருள் பாலிக்கின்றார்.

தரிசனம் செய்ய வரும் அனைவரையும் மேற்கு கோபுரத்தின் வாயிலில் விநாயகர் தோன்றி வரவேற்கின்றார்.

துர்வாசர் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுகின்றார்.

விநாயகப் பெருமான், துர்வாசரின் தரிசன விருப்பத்தை மனதில் கொண்டு, தன் தந்தையாகிய நடராஜப் பெருமான், எப்படி ஆனந்த நடனக் காட்சியை நல்கினார் என்பதை, தனது பெருத்த உடலோடு, விடைத்த பெரிய காதுகளோடு, சலங்கை ஒலிக்க, அங்கங்கள் குலுங்க நடனமாடிக் காட்டுகின்றார்.
பக்தியுடன்
சோழ.அர.வானவரம்பன்
இதைக் கண்ட அனைவரும், ஐங்கரனின் ஆட்டத்தில் மனம் குலுங்கி சிரித்து மகிழ்கின்றனர்.

இத்தாண்டவத்தைக் கண்ட அனைவரும் நடராஜப் பெருமானின் திருக்கோலத்தை நினைந்து மனம் குளிர்கின்றனர்.

துர்வாசரும், கண்ணால் கற்பக கணபதி தந்த காட்சியைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, உவகை கொண்டு, நடராஜ நடனத்தை தரிசித்த திருப்தியுடன், உலக மக்கள் அனைவரும் உமது நடனக் காட்சியைக் காண வேண்டும் என்று வரம் வேண்டிக்கொண்டு, நடராஜரைத் தரிசிக்காமலேயே, கணபதியின் ஆட்டத்தை நெஞ்சத்தில் கொண்டு, மனதால் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து, தனது ஆசிரமம் திரும்புகின்றார்.

அனைவர் மனதிலும் பயம் விலகி இன்பமயம் பொங்கச் செல்கின்றனர்.

இதுவே, கற்பக கணபதி மேற்கு கோபுர கல்ஹாரத்தில் குடி கொண்ட புராணம்.

ஸ்ரீ கற்பக கணபதியே சிதம்பரம் ஆலயத்தின் ஸ்தல விநாயகராக கொண்டாடப் படுகின்றார்.

பொதுவாக விநாயகர் ஆலயத்தில் மூஞ்சூறு எனும் எலி வாகனம் தான் விநாயகர் எதிரில் அமைந்திருக்கும்.

ஆனால், கற்பக கணபதி ஆலயத்தில், நடேச அம்சமாக நாட்டியம் ஆடியவருக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

நடராஜ அம்சமாக விளங்கிய கணபதி ஆலயத்திற்கு நேரெதிரே, சிவ விருக்ஷமாகிய வில்வ மரத்தினை – உமாபதி சிவம் (கி.பி.14ம் நூற்றாண்டு) ஸ்தாபித்தார். அம்மரம் இன்றும் விளங்குகின்றது.

அந்த மரத்தின் இடத்தில் இருந்த ஒரு நாகப் பாம்பினை அங்கிருந்து அகற்றி, கோயிலின் அருகேயே ஒரு துவாரம் அமைத்து, அதற்கு வழிபாடும் செய்தார்.

அந்த நாகம் இருந்த இடம் இன்று ‘ராகு’ கிரஹமாக அமைந்து பக்தர்களால் வழிபாடு செய்யப்படுகின்றது.

நாட்டியமாடும் கோலத்தில் அமைந்த முதல் விநாயகர் விக்ரஹம் என்ற பெருமையும் ஸ்ரீ கற்பக கணபதிக்கு உண்டு.

பி.கு. : துர்வாசருக்காக நடனமாடியவர் கற்பக கணபதி.

மேற்கு கோபுர வழி வரும் பக்தர்கள் இவரைத் தான் முதலில் வழிபட வேண்டும்.

விநாயகரைத் தரிசித்தால், உடன் முருகனையும் வழிபட வேண்டும் அல்லவா?

கற்பக கணபதியைத் தரிசித்து கிழக்கு நோக்கி கோயில் உள் சென்று இடது புறம் திரும்பினால், அதே மேற்கு கோபுரத்தில், கல்ஹாரத்தில் புடைப்புச் சிற்பமாக விளங்கும் குமரக்கோட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

தாண்டவமாடிய விநாயகர் & முருகரின் தரிசனத்திற்குப் பிறகு சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தியை தரிசனம் செய்வது மிகச்சிறப்பு!